திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருண் முறையீடு
tiruvaruṇ muṟaiyīṭu
இங்கித மாலை
iṅkita mālai
முதல் திருமுறை / First Thirumurai

007. வடிவுடை மாணிக்க மாலை
vaṭivuṭai māṇikka mālai

    காப்பு
    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி
    வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
    தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
    ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.
  • கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 2. கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
    உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
    அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
    மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
  • 3. அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
    குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
    பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
    மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
  • 4. மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
    கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
    தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
    வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
  • 5. பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
    அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
    தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
    மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
  • 6. திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
    தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
    பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
    மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 7. உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
    பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
    அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
    மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
  • 8. கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
    விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
    பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
    மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 9. மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
    சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
    அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
    வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
  • 10. காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
    சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
    தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
    வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
  • 11. கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
    நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
    பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
    வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
  • 12. நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
    போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
    பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
    மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
  • 13. கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய்
    நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
    தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
    மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
  • 14. சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின்
    வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
    தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
    மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.
  • 15. தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
    வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
    எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
    மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
  • 16. பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
    முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
    கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
    மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 17. பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
    செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
    கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
    மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 18. இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
    தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
    நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
    மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 19. கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
    அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய்
    தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
    மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 20. பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
    தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
    பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
    மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
  • 21. காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி
    யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
    நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
    மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 22. வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
    ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
    ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
    மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 23. பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
    விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
    நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
    மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 24. அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
    தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
    தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
    மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
  • 25. ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
    சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
    நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
    வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
  • 26. சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
    கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
    தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
    வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
  • 27. நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
    பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
    தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
    வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.
  • 28. முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
    ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
    எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
    மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 29. மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
    பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
    பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
    மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 30. சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
    நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
    தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
    வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 31. செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
    சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
    துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
    மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
  • 32. சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
    ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
    வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
    வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
  • 33. புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
    கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
    தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
    வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
  • 34. உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
    துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
    என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
    மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 35. வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
    உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
    தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
    வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
  • 36. மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
    றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
    காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
    வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
  • 37. வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
    லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
    யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
    மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 38. முத்தேவர் விண்ணன்37 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
    எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
    செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
    மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 39. திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள்
    கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
    ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
    மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 40. வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
    பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
    காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
    மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 41. சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
    போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
    யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
    வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
  • 42. போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
    வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
    ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
    மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
  • 43. ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
    பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
    தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
    மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 44. அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
    பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம்
    கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
    வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
  • 45. அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
    முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
    கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
    வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
  • 46. ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
    ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
    காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
    வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 47. இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
    எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
    கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
    மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
  • 48. வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
    ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
    எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
    மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
  • 49. விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
    வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
    குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
    மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
  • 50. பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
    துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
    இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
    மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 51. சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
    மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
    தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
    வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 52. வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
    எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
    இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
    மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
  • 53. எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
    தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
    செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே
    வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
  • 54. தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
    தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த
    இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம்
    மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 55. அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
    கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
    குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
    மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
  • 56. செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
    மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
    கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
    வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
  • 57. தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங்
    கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
    இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
    வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
  • 58. சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
    பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
    மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
    மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 59. எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
    செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
    வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
    வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
  • 60. ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
    சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
    தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
    வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
  • 61. மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
    அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
    முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
    வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
  • 62. கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
    குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
    பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
    மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
  • 63. கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
    குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத்
    திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த
    மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
  • 64. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
    பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
    புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
    மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
  • 65. தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
    வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
    ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
    மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 66. மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
    திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
    விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
    வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
  • 67. என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
    நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
    பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
    மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 68. துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
    இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
    கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
    வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
  • 69. சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
    பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
    சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
    மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
  • 70. சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
    அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
    நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
    வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 71. அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
    செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
    கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
    வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
  • 72. கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
    நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
    எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட
    வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
  • 73. கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
    பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
    சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
    மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
  • 74. மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
    தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
    சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
    மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
  • 75. வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
    பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
    பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
    வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
  • 76. மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
    நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
    கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
    வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
  • 77. ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே
    கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன்
    தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
    மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
  • 78. எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
    சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
    சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
    மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 79. செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
    கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
    தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
    வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
  • 80. தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
    சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
    நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
    வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 81. நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
    தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
    தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
    வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
  • 82. கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
    நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ
    வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
    மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 83. சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
    கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
    அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
    மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
  • 84. பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
    சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
    நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
    மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 85. பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
    பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
    காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
    மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 86. தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
    மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
    காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
    வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
  • 87. களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
    உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
    குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
    வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 88. ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
    தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற்
    காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும்
    வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
  • 89. திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
    வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம்
    கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
    மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
  • 90. உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
    நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
    படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
    மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 91. கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
    பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
    சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே
    மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 92. நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
    என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
    முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
    ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
  • 93. நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
    நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
    தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
    மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 94. அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
    முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
    இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
    மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
  • 95. கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
    தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
    ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
    மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
  • 96. ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல்
    ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
    சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
    மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 97. பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
    துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
    கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
    வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 98. காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
    ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
    சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
    மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
  • 99. பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
    என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
    மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
    மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
  • 100. பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
    கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
    மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
    மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
  • 101. நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
    தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
    ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
    வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
  • 102. வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
    வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
    வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
    வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

    • 35. சௌந்தரம் என்பது சவுந்தரம் எனப் போலியாயிற்று. தொ.வே.
    • 36. கரம்-விடம். தொ.வே.
    • 37. விண்ணன் -இந்திரன். தொ.வே.
    • 38. மாசை -பொன் தொ.வே.
    • 39. கையிலேந்து எனற்பாலது சயிலேந்து எனப் போலியாயிற்று. தொ.வே.

வடிவுடை மாணிக்க மாலை // வடிவுடை மாணிக்க மாலை